1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (17:26 IST)

அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்!

அரசு அலுவலகங்களை அழகாக பராமரிப்பது சம்மந்தமாக தலைமைச் செயலர் அரசு ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அன்புள்ள அலுவலகத் தோழர்களே... நமக்கு அலுவலகம் என்றதும் குவிந்து கிடக்கும் கோப்புகளும், உடைந்த நிலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் நாற்காலிகளும், பழுதடைந்த அலமாரிகளும், உபயோகமில்லாமல் கிடக்கும் கணினிகளும் கடந்து செல்லும்போதே துர்நாற்றம் வீசி மூக்கைப் பொத்த வைக்கின்றன கழிவறைகளும் பெரும்பாலும் நினைவுக்கு வருகின்றன.

தூய்மையான அலுவலகம் நம் அலுவலகத்தை நேசிக்கத் தகுந்ததாக மாற்றும்.. அத்தகைய எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக நாம் ஆற்றவேண்டிய பணிகள் எளிமையானவை.

1. நாம் பயன்றற நாற்காலிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். உபயோகமற்ற அறைக்கலன்களை உடனடியாக அகற்றி ஏலம் விட வேண்டும்.

2.முடிவற்ற கோப்புகளை முறைப்படி ஆவண அறைக்கோ, ஆவணக் காப்பகத்துக்கோ அனுப்பி கோப்புகள் குவிந்து கிடக்கும் சூழலை உருவாக்கக் கூடாது.

3.ஆவணக் காப்பகத்திலிருந்து மேற்கோள் பொருட்டு பெறப்பட்ட கோப்புகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். பல கோப்புகள் துறைகளின் வசமே இருப்பது குறித்து 2011-ம் ஆண்டு ஆணையர், ஆவணக் காப்பகம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

4.கணினிகள் பயன்பாடில்லாமல் இருந்தால் அவற்றை முறையாகக் குழு அமைத்து முறைகேடு நிகழா வண்ணம் களைவதன் மூலம் அலுவலகம் பொலிவு பெறும்.

5.மின்கழிவுகளும் தக்க வழிமுறைகளைப் பின்பற்ற அகற்றப்பட வேண்டும்.

6.அலுவலர்கள் மேசையில் கோப்புகளை அழகாக அடுக்கிவைத்து பணியாற்றினால் பணிச் சூழலும், பணிப் பண்பாடும் மேன்மையடைய வாய்ப்புகள் அதிகம்.

7.அலுவலக சுகாதாரம் பேணப்படுவதும், குப்பைகள் அகற்றப்படுவதும், அவ்வப்போது கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படுவதும் முக்கியம்.

8.தூய்மைப் பணியாளர்கள் மணிக்கொரு முறை கழிவறைகளைச் சுத்திகரித்து அவை துர்நாற்றமின்றி விமான நிலையங்களில் உள்ள ஓய்வறைகளைப் போலத் திகழ தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

9. துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் பார்வையாளர்களுக்கெனக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அவர்கள் தேவையின்றி தாழ்வாரங்களில் நடமாடிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

10.துறையின் தலைமை அதிகாரி தன் அறையோடு நின்றுவிடாமல் அவ்வப்போது தன்னுடைய கட்டுப்பாட்டிலுள்ள அலுவலகத்தை ஆய்வு செய்து அலுவலகத் தூய்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். செலவின்றி மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கைகள் மூன்று வாரங்கள் மட்டும் இடைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்தினால் அது உடலின் ஓர் உறுப்பாகவே ஆகிவிடும். இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்து எழில்மிகு அரசு அலுவலகம் என்கின்ற நோக்கத்தை அடையுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.