புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : திங்கள், 7 ஜனவரி 2019 (14:27 IST)

அம்பையில், இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொலை: கள்ளக்காதலனின் தந்தை வெறிச்செயல்

நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே பட்டப்பகலில் இளம்பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த விவகாரத்தில்,  கள்ளக்காதலனின் தந்தை கைது செய்யப்பட்டார்.


 
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் விஜி என்ற சுந்தரி (வயது 37). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி சண்முவேல் மகன் நாலாயிரம் (40). இவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்தனராம். அதேநேரம் நாலாயிரம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அம்பையில் வசித்து வருகிறார்
 
இதில் சுந்தரிக்கு பிரகாஷ் (8), நாலாயிரமுத்து என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளனர். இவர்கள் நாலாயிரத்துக்கு பிறந்த குழந்தைகள் என்றும் சொல்கிறார்கள்.  நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் சுந்தரியும், அவருடைய தங்கை ராமலட்சுமியும் (32) பிரம்மதேசத்தில் உள்ள நாலாயிரத்தின் தந்தை சண்முகவேல் வீட்டுக்கு சென்றனர். தனக்கும் தன் குழந்தையும் வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டும் என சுந்தரி கேட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக தங்கை ராமலட்சுமியும் பேசியுள்ளார். 
 
ஆனால் சண்முகவேல், உங்களுக்கு உதவி செய்ய முடியாது என அவர்களிடம் கூறியுள்ளார். இதனால் சண்முகவேலுவுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சண்முகவேல், சுந்தரியை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க முயன்ற ராமலட்சுமியையும் அவர் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் விழுந்தனர்
 
இதில் சுந்தரி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அம்பை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாகிர்உசேன், அம்பை இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சுந்தரியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
படுகாயங்களுடன் கிடந்த ராமலட்சுமியையும் போலீசார் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.