1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 ஜூலை 2018 (13:53 IST)

ஃபார்மலின் தடவிய மீன்கள் - பொதுமக்கள் கவனத்திற்கு!

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வேதிப்பொருள் தடவப்பட்ட மீன்கள் விற்பனையாகி வருகிறது என்கிற தகவல் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 
கடந்த சில நாட்களாக சென்னையில் மீன்கள் விற்பனை செய்யப்படும் சில இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மீன்கள் கெட்டு விடாமல் இருப்பதற்காக அவற்றின் மீது ஃபார்மலின் என்கிற வேதிப்பொருள் தடவப்படுவதாகவும், அதனால் வயிற்றுவலி, வயிற்றுப்புண், ரத்தப் புற்றுநோய் என பல உடல் நல பாதிப்புகள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறினர்.
 
கேரளாவில் தற்போது மீன் பிடி தடைக்காலம் என்பதால், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததாகவும், ஆனால், ஃபார்மலின் தடவப்பட்டிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழகத்திலிருந்து வரும் மீன்களுக்கு கேரள அரசு தடை விதித்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. 
 
சென்னையில் சில இடங்களில் ஃபார்மலின் தடவப்பட்ட மீன்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். சில இடங்களில் கைப்பற்றப்பட்ட மீன்கள் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. ஃபார்மலின் தடவப்பட்ட மீன்களை பொதுமக்களால் கண்டுபிடிக்க முடியாது.  மீன் இறைச்சியை வெட்டி பிரத்யோக கெமிக்கல் சேர்த்தால் அது மஞ்சள் நிறமாக மாறினால் அதில் ஃபார்மலின் சேர்க்கப்பட்டிருக்கிறது என தெரிந்துகொள்ளலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
அப்படி நிரூபிக்கப்பட்டால் மீன் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், மீன் இறைச்சி உண்ணும் அசைவ பிரியர்களிடம் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.