குளங்களில் 2 தினங்களாக, ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு மணல் திருட்டு - களத்தில் இறங்கிய பாஜக
கரூர் மாவட்டம், வெள்ளியணை தென் பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக அதிக அளவில் மணலை டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் அந்த இடத்திற்கு சென்று குளத்து மணல் எடுப்பதற்கு முறையான அனுமதி ஏதும் உள்ளதா என்று விசாரித்த போது, முறையான எந்த பதிலும் இல்லை.
இது பற்றி தகவல் அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் ஆலோசனையின் பேரில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் இன்று மதியம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இதுபோன்று திருட்டு மணல்களை தனி நபர்கள் எடுத்து தமிழக அரசை ஏமாற்றி கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்படுகின்ற இழப்பை தடுக்கின்ற வகையிலும், தனி நபர்கள் கொள்ளை லாபம் அடிப்பதை தடுக்கின்ற வகையிலும், இயற்கை கனிம வளங்களை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை ஏற்கப்படாமல் தொடர்ந்து இது போன்ற மணல் திருட்டுகளை தனி நபர்கள் தொடர்ந்தால் அந்த லாரிகளை சிறை பிடிப்பதோடு, கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களை திரட்டி, மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதையும் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.