வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 மார்ச் 2018 (14:45 IST)

ஜெ. திடீரென மயங்கி விழுந்தார் - மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம்

மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்தது என விசாரணை ஆணையத்தில்  மருத்துவர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை சசிகலா குடும்பத்தினர் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. மேலும், ஆளுநர் உட்பட யாரையும் அவரை பார்க்க சசிகலா தரப்பு அனுமதிக்கவில்லை. எனவே, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. 
 
எனவே, அவரின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின், ஜெ.விற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டனில் பணிபுரிந்தவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
ஜெ.விற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த அவரின் உறவினரும் மருத்துவருமான சிவக்குமாரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், 2வது முறையாக விசாரணை ஆணையத்தில் ஆஜராகி இன்று விளக்கம் அளித்தார். 
 
அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பே ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் இருந்தது. மேலும், சரும பிரச்சனைக்காக அவர் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொண்டார். அந்நிலையில்தான், அவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் முதலுதவி சிகிச்சை அளித்தபின் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது நானும் உடனிருந்தேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.