1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2017 (16:14 IST)

தனக்கு போட்டியாக கிருஷ்ணபிரியா?: தினகரன் அதிரடி பேட்டி!

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவரது இடத்தை பிடிக்க சசிகலா குடும்பம் அதிரடியாக களமிறங்கியது. சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால் டிடிவி தினகரன் அவரது பணிகளை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் டிடிவி தினகரனுக்கு அவ்வப்போது அவரது குடும்பத்திலேயே சில எதிர்ப்பு குரல்கள் எழும்புகின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த வீடியோ வெளியானதில் தினகரனுக்கு எதிராக கடுமையான பதிவுகளை முன் வைத்தார் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா.
 
கிருஷ்ணபிரியா செய்தியாளர் சந்திப்பு, சமூக வலைதள பதிவுகள் என அடிக்கடி ஊடக வெளிச்சத்துக்கு வருவதால் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அவரது ஆதரவாளர்கள் அவரை அடுத்த புரட்சித்தலைவி என கூறுகின்றனர்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் கிருஷ்ணபிரியா அரசியலுக்கு வந்தால் அவருடன் சேர்ந்து பணியாற்றுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் சமீபத்தில் கிருஷ்ணபிரியா தனக்கு ஜெயலலிதா வளைக்காப்பு நடத்திய புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த தினகரன், கிருஷ்ணபிரியா எனது உறவினர் தான். என் மாமா பொண்ணு, அவர் போட்டோ வெளியிட்டது எல்லாம் அவங்க விருப்பம். எங்கள் குடும்பத்தில் யார் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை சசிகலா தான் முடிவு செய்வார்.
 
நாளைக்கு என்னையே அரசியலை விட்டு ஒதுங்க சொன்னால், நான் பாட்டுக்கு என் தொழிலை கவனிக்க சென்றுவிடுவேன். எனக்கு பதிலாக யார் வந்தாலும் அவர்களுக்கு பின்னால் இருந்து எனது முகம் தெரியாதவாறு உதவி செய்வேன் என அவர் கூறியுள்ளார்.