1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (11:27 IST)

மத பிரச்சினையை கிளப்பினால் கடுமையான நடவடிக்கை! – அமைச்சர் எச்சரிக்கை

தமிழகத்தில் மத பிரச்சினையை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் தமிழ் கடவுள் முருகன் மற்றும் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சேனலுக்கு பின்னால் இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாகவும் அவர்களை கண்டித்து கார்ட்டூன் சித்தரித்து வெளியிட போவதாகவும் கூறிய ஓவியர் சுரேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவங்களால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மத ரீதியான விவாதங்கள் எழுந்துள்ளது. மத பற்றாளர்களை புண்படுத்தும்படி செயல்படுவது குறித்து நடிகர்கள் சிலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்து இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் இயக்கங்களை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதனால் பரபரப்பான சூழல் எழுந்துள்ள நிலையில் பேசியுள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் “தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதை ஏற்க முடியாது. மதரீதியாக கலவரங்களை தூண்டும்படி செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.