கையில காசில்ல வெளிநாட்டு முதலீடுகளை நம்பியிருக்கும் எடப்பாடியார்?

edappadi
Last Modified வெள்ளி, 12 ஜூலை 2019 (16:06 IST)
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் மற்ற மாநிலங்களை விட மிக ஆர்வமாக செயல்பட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் அந்நிய முதலீடுகள் குறித்து பேசியவர் “தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் யாதும் ஊரே என்ற சிறப்பு பிரிவும், அதற்கென ஒரு இணையதளமும் அமைக்கப்படும்” என கூறினார்.

இதற்காக டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தொழில் வழிகாட்டி என்ற புதிய பிரிவு தொடங்கப்படும். தொழில் வளர் தமிழகம் என்ற பெயரில் பல நாடுகளில் கருத்தரங்கங்களும் நடைபெறும் என அவர் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த தொழில் முனைவோர் மாநாட்டில் ஏகப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆனாலும் தொடர்ந்து அந்நிய முதலீடுகள் மீது முதல்வர் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன் என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் இடையே எழுந்துள்ளது.

சிலர் ஒரு மாநில அரசை செயல்படுத்த அம்மாநில மக்களின் வரிப்பணம் மட்டும் போதியதாய் இருக்காது. மேலதிகமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமானால் இதுபோன்ற அந்நிய நிறுவனங்களின் முதலீடும், வரிகளும் மாநில அரசுக்கு அவசியம் என கூறுகிறார்கள்.

மேலும் சில அரசியல் விமர்சகர்கள் “மாநில அரசு வரவுக்கு மீறிய செலவுகளில் ஈடுபட்டுவிட்டது. மேலும் சமீபத்தில் நிலவிய தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கஜானாவிலிருந்து கணிசமான அளவில் பணம் செலவாகியிருக்கிறது. ஆட்சி முடியும் வரை அடிப்படை வசதிகளையும், கட்டுமானத்தையும் குலையாது வைத்திருக்க பணம் தேவைப்படுகிறது. அதற்காகவே அளவுக்கதிகமாக அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் முயற்சித்து வருகிறார்” எனவும் கூறுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் அந்நிய முதலீடுகள் மாநில பொருளாதாரத்திற்கு அவசியமானதுதான். அதே அளவு உள்ளூர் தொழில்முனைவோருக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :