திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (19:54 IST)

வெங்காயம் கொடுத்தால் பிரியாணி தருவோம்! – ஹோட்டலின் பலே டீல்!

நாட்டில் வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெங்காயம் தந்தால் பிரியாணி தருவோம் என உணவகம் ஒன்று அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயத்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாட்டால் விலைவாசியும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மத்திய அரசு எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து கொடுத்தாலும் அளவில் பெரியதாய் இருக்கும் அந்த வெங்காயத்தை வாங்க மக்கள் தயங்குகிறார்கள்.

இந்நிலையில் வெங்காயத்தை வைத்து செய்யப்படும் விளம்பரங்கள் அதற்கும் மேல் உள்ளது. சில மொபைல் விற்பனை கடைகள் ஃபோன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என விளம்பரம் செய்து பப்ளிசிட்டி தேடிக் கொள்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் அரைக்கிலோ வெங்காயம் கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம் என ஹோட்டல் ஒன்று அறிவித்திருப்பது சென்னை பகுதியில் வைரலாகி வருகிறது.

தரமணி அடுத்து கந்தன்சாவடியில் உள்ள ஓ.எம்.ஆர் புட் ஸ்ட்ரீட் என்ற உணவகம்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த கடை உரிமையாளர் கூறும்போது, வெங்காயத்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் வெங்காயத்தை தேடி சென்று வாங்குவது இயலாத காரியம் என்பதால் வாடிக்கையாளர்களே வெங்காயத்தை கொண்டு வரும் வகையில் இந்த சலுகையை வழங்கியதாக தெரிவித்துள்ளார். வெங்காய தட்டுபாடு நீங்கும் போது இந்த சலுகையும் முடிவடையும் என அவர் கூறியுள்ளார். மக்கள் பலர் அரை கிலோ வெங்காயம் கொடுத்துவிட்டு பிரியாணி வாங்கி சாப்பிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.