வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (14:30 IST)

விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு..! வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரிய மனு தள்ளுபடி.!

highcourt
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவுக்குப் பின், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் 45 நாட்களுக்கு மேல் மக்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் தேர்தல் நடத்தை விதியின் கீழ் இருக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறி, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி எழிலன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
அந்த மனுவில், தேர்தல் அறிவிப்பு அரசியல் சட்ட விதிகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் மீறும் வகையில் உள்ளதால், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்கூட்டியே நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். 
 
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு என்பது முழுக்க முழுக்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும், இந்த வழக்கு விளம்பர நோக்குடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 
மேலும், தேர்தல் நடவடிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் எந்த காலக்கெடுவும் விதிக்கப்படாத நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.