ராஜாதிராஜன் இந்த ராஜா…! ராஜா கெட்டப்பில் வந்த வேட்பாளர்!
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று ஒருவர் ராஜா வேடத்தில் சென்று வேட்புமனு தாக்கல் செய்தது வைரலாகியுள்ளது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி இன்றுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல், பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் பலரும் தீவிரமாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர், இந்நிலையில் கோவை தெற்கு மண்டல தேர்தல் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்ய ஒருவர் ராஜா போல வேடமணிந்து வந்துள்ளார்.
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த நூர்முகம்மது என்பவர் சட்டமன்றம், பாராளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் என இதுவரை 37 தேர்தல்களில் தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிட்டு வருகிறார். தற்போது வெற்றிகரமாக 38வது முறை மனுத்தாக்கலுக்கு வந்த அவர் தள்ளுவண்டியில் ராஜா வேடம் போட்டுக் கொண்டு கூட இரு காவலர்கள் கெட்டப் ஆட்களோடு சென்று மனு தாக்கல் செய்துள்ளார்.