1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 14 ஏப்ரல் 2022 (12:30 IST)

நள்ளிரவு முதல் தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை

மீன் இனப்பெருக்கக் காலமான 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

 
இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக்கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால், இந்த மாதங்களில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படும்.
 
அதன் அடிப்படையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, உள்ளிட்ட தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6,500 விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல கூடாது என தடை விதிக்கப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த வருடம் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 14 வரையிலும் தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்பதால் இன்று நள்ளிரவு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது.