வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:19 IST)

கோவிலில் மது அருந்தியதை தட்டிக்கேட்டவர் அடித்து கொலை! மணலி புதுநகர் அருகே பயங்கரம்

சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள வெள்ளிவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் குரு (வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.



இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வெள்ளிவாயல் அம்மன் கோவில் முன்பு 4 பேர் மது அருந்திக்கொண்டு இருந்தனர்.  அவர்களை குரு தட்டிக் கேட்டுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு போதையில் இருந்த 4 பேரும், குருவை பலமாக தாக்கி  கீழே தள்ளியுள்ளனர். அப்போது கல்லின் மீது விழுந்த குருவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது . 
 
இதனால் பயந்து போன அந்த 4 பேரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த குருவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குரு பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த மணலிபுதுநகர் போலீசார் குருவின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் கொலைக்கு காரணமான விச்சூர் காந்தி நகரைச் சேர்ந்த அஜித் என்கின்ற அப்பு (25), விச்சூர் செல்லியம்மன் கோவில் தெருவை சார்ந்த அஜித் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.