1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 4 ஜூன் 2018 (19:59 IST)

குமாரசாமியுடன் சந்திப்பு கமல் செய்த துரோகம்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதற்கான தமிழக, புதுச்சேரி பிரதிநிதிகளும் நியமனம் செய்யப்பட்டுவிட்டது. இனி கர்நாடகம் மற்றும் கேரளா பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டவுடன் முழுக்க முழுக்க காவிரியில் இருந்து நீர் திறந்துவிடுவது ஆணையத்தின் கைக்கு போய்விடும். இந்த நிலையில் நீரை திறக்கவோ அல்லது திறக்க முடியாது என்று சொல்வதற்கோ உரிமை இல்லாத கர்நாடக முதல்வரை கமல் சந்தித்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இந்த சந்திப்பு குறித்து கூறியபோது, 'கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்தது சுயநலமானது. தமிழகத்துக்கு விரோதமானது. அவர் தனது தனிப்பட்ட சுயநலத்திற்காக காவிரிப் பிரச்னையை திசை திருப்பக்கூடாது. இதைவிட துரோகம் இல்லை. அனைத்துக்கட்சிகளும் கூட்டம் போட்டு, உச்சநீதிமன்றத்தின் மூலம் காவிரி நீரை மீட்க வேண்டும் என தீர்மானித்துள்ளோம். 
 
கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்க மாட்டேன் என்று தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டவர் குமாரசாமி. அதனால் தான் அவர் அங்கு குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளார். கமல்ஹாசன் எப்போது இருந்து காவிரிக்காக பேசுகிறார்? 2 மாதங்களாக தான் பேசுகிறார். காவிரி நீரை திறக்கும் அதிகாரம் ஆணையத்திற்கும், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும்தான் உண்டு. அது குமாரசாமிக்கே இல்லை. அப்படி இருக்கும் போது கமல்ஹாசன் சந்திப்பதில் என்ன பயன்? அவர்கள் சந்திப்பால் நீர் வந்துவிடப் போகிறதா? இது கமல்ஹாசனின் சுயநலப் போக்கு. விவசாயிகளுக்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே அவர் செய்யும் துரோகம்' என்று கூறினார்.