செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (23:13 IST)

மின் இணைப்புகள் இல்லாமல் கொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்?

Electricity shut down tomorrow in Chennai
கரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு வீடுகளை கொடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வருகை தாமதம் | கைக்குழந்தையுடன் பயனாளிகள் சுமார் 1 ¼ மணி நேரம் அமரப்பட்டிருந்ததால் பரிதவிப்பு .
 
மின்சாரத்துறை அமைச்சர் ஊர் அருகே மின் இணைப்புகள் இல்லாமல் கொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் அதுவும் முதல்வர் காணொளி காட்சியில் அரங்கேறிய சம்பவம்
 
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட, பி.வெள்ளாளப்பட்டி பகுதியை அடுத்த கீழூர் பகுதியில் இன்று காலை தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நிகழ்ச்சியும் பயனாளிகள் சிலருக்கு வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஊரின் அருகே அதுவும் முதல்வர் காணொளி காட்சியின் கீழ் நடைபெற்ற நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நிகழ்ச்சியில் மின் இணைப்புகள் ஒரு வீட்டில் கூட இல்லை, மின் மீட்டர் கூட பொறுத்தாத அவலநிலையில் அவசர அவசரமாக நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சி – பயனாளிகளை சுமார் 1 ¼ மணி நேரம் காக்க வைத்த கரூர் மாவட்ட ஆட்சியரால் பரபரப்பு – ஏற்கனவே கழிவுநீர் செல்ல வழியில்லை, மழைநீர் செல்லவும் வழியில்லை என்று கூறி திமுக பெண் எம்.எல்.ஏ மற்றும் திமுக வினரை சிறைபிடித்து முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு.
 
கரூர் அருகே உள்ள பி.வெள்ளாளப்பட்டி பகுதியினை அடுத்த கீழூர் பகுதியில் ரூ 24.91 கோடி திட்ட மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிதாக 288 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு விழா நிகழ்ச்சியினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்றைய நிகழ்ச்சி நிரலில் காலை 8.13 மணிக்கு ஒரு அறிவிப்பினை அறிவித்தது. 10 மணிக்கு கொடி நாள் வசூல் துவக்கி வைத்தல், காலை 10.30 மணிக்கு புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் துவக்கி வைத்தல்., பின்பு காலை 11 மணியளவில் புலியூர் பி.வெள்ளாளப்பட்டி பகுதியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ளதை முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்க, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கலந்து கொள்கின்றார் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சியினை அறிவிப்பு செய்து விட்டு, செய்தியாளர்களை புலியூர் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைத்த நிலையில், நிகழ்ச்சியில் மாற்றம் என்று காலை 10.14 மணிக்கு நிகழ்ச்சியில் மாற்றம் அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைத்தல் முதலில் என்று அனைவரையும் அழைக்கழித்தது.

பின்னர் அந்த வாட்ஸ் அப் மெசேஜ் ஐ Delete செய்து விட்டு, மன்னிக்கவும் பழைய நிகழ்வுகளை தொடரும் என்று 10.46 மணிக்கு அனுப்பி அனைத்து செய்தியாளர்களையும், புகைப்பட ஒளிப்பதிவாளர்களையும் அழைக்கழித்தது ஒரு புறம் இருக்க, காலை 11 மணிக்கு வர வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் 1 ¼ மணி நேரம் தாமதமாக வந்தார். கைக்குழந்தையுடன் பயனாளிகள் காத்திருந்த நிலையில், ஏற்கனவே குலுக்கலில் டோக்கன் வாங்கியவர்கள் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் வந்திருந்த நிலையில், 7 நபர்களுக்கு மட்டுமே வீடுகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது மட்டுமில்லாமல், பலர் எப்போது எங்களுக்கு வீடுகள் வரும் என்று கேட்க இருந்தவர்களிடமும் எந்த வித கோரிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கேட்க வில்லை, இந்நிலையில், கண் துடைப்பிற்காக 7 நபர்களுக்கு வீடுகளை ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர், முன்னதாக ஒரே ஒரு வீட்டில் மட்டும் குத்துவிளக்கு ஏற்றி, அதில் குடியிருப்பவர்களிடம் உரையாடினார். இதில் வேடிக்கையான விஷயம் என்ன என்றால் 288 வீடுகளில் ஒரு வீடுகளுக்கு கூட மின் இணைப்பு இல்லை, வடிகால் வாய்க்கால் கட்டியும் அந்த கழிவு நீர் செல்ல வசதியும் இல்லை, குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அஸ்திவாரம் போட்ட நிலையில், அரைகுறையாக நடைபெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இதுமட்டுமில்லாமல் ஒரு சில கட்டிடங்களுக்கு மட்டும் மின் இணைப்பு நேரடியாக தூண்டு முள் போட்டது போல் ஒயர் மூலம் எடுத்த காட்சிகளும், கழிவுநீர் தேங்கிய காட்சிகளும் ஒருபுறம் இருக்க, அங்கு வந்திருந்த திமுக பெண் எம்.எல்.ஏ சிவகாமிசுந்தரி மற்றும் திமுக வினரை அந்த குடியிருப்பு பகுதியில் அருகே வசிப்பவகர்கள் சிறைபிடித்து முற்றுகையிட்டனர். ஏற்கனவே, இதே கீழூர் பகுதியில் 300 வீடுகள் உள்ள நிலையில் சுமார் 1200 நபர்கள் வசித்து வரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வழியும் மழைநீர் போக, போக்கு இல்லாமல், வீடுகளுக்குள் மழைநீர் சென்று வரும் நிலையில், தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வருபவர்களின் கழிவுநீரும் இதே பகுதிக்கு தான் வரும் ஆகவே அனைவரும் நலமுடன் வாழ வேண்டுமென்றால் இந்த மழைவடிநீர் செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டுமென்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தினால் சுமார் 30 நிமிடங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
 
மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களது சொந்த மாவட்டமும், அவரது ஊர் அருகே உள்ள புலியூர் பேரூராட்சியில் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் மின் இணைப்புகளும் இல்லை, மின் மீட்டர் கூட இல்லை, அனைத்தும் காலியாகவே உள்ளது வியப்பின் குறியீடாக உள்ளது என்று புலம்பிய படி பயனாளிகள் சென்றனர்.