திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஏப்ரல் 2024 (15:15 IST)

போன் பண்ணி ஓட்டு கேட்டு, G Payவில் பணம் அனுப்பும் அண்ணாமலை! – திமுகவினர் பரபரப்பு புகார்!

Annamalai
தேர்தல் பிரச்சார அனுமதி முடிந்த நிலையிலும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போன் மூலமாக பேசி ஓட்டு கேட்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



தமிழ்நாட்டில் நாளை ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 6 மணியுடன் அனைத்து விதமான பிரச்சாரங்களையும் நிறுத்திக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை, விதிக்கப்பட்ட பிரச்சார காலக்கட்டத்தை தாண்டியும் பிரச்சார பணிகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் கடிதம் எழுதியுள்ள கோவை வடக்கு மாவட்ட திமுக சட்டத்துறை அணி அமைப்பாளர் க.பழனிசாமி, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக தேர்தல் பணிமணையில் இருந்து வாக்காளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு அண்ணாமலை வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், ஜி பே மூலமாக பணம் அனுப்பியும் வருவதாக கூறியுள்ளார்.


மேலும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அவினாசி சாலையில் தங்கியிருந்து அண்ணாமலைக்கு ஆதரவாக போன் மூலம் பேசி பணம் அனுப்பி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்.

ஏற்கனவே தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கும் மேலும் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்த நிலையில் தற்போது இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K