அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது? பேராசிரியர்கள் ஆளுநருக்குக் கடிதம்!
நிர்வாகக் காரணங்களுக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் மசோதாவை கடந்த ஆண்டு தமிழக அரசு நிறைவேற்றியது.
தமிழக அரசின் கல்வி சாதனைகளுள் ஒன்றாக திகழ்கிறது அண்ணா பல்கலைக்கழகம். பொறியியல் உள்பட பல்வேறு படிப்புகளை கொண்டுள்ள பல கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா கடந்த 16-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் படி அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை உண்டாக்கியது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் பெயரை மாற்றக் கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.