வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 ஜூன் 2018 (07:06 IST)

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: அமைச்சர் உதயகுமார் உறுதி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் அந்த மருத்துவமனை எந்த நகரில் அமைக்கப்படும் என்பது குறித்து மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனை செய்து வந்தனர். பெரும்பாலான மக்களின் விருப்பம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பதாகவே இருந்தது.
 
இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் சற்றுமுன் உறுதி செய்தார். மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாகவும், இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டவுடன், டெல்லியில் கிடைக்கும் அனைத்து உயர் மருத்துவ சிகிச்சைகளும் மதுரையில் கிடைக்கும் என்றும் அமைச்சர் உதயகுமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 
 
மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக மத்திய  மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் எனக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பணி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என்றும்,  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.
 
2015-16-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு பரிந்துரைத்த மதுரை உள்ளிட்ட 5 இடங்களை பரிந்துரை செய்தது. அரசு பரிந்துரை செய்த அந்த ஐந்து இடங்களிலும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதை அடுத்து தென் மாவட்ட மக்கள் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.