புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (13:41 IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஏழு ஆண்டுகள் சிறை வழங்கிய நீதிமன்றம்!

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஏழு ஆண்டுகள் சிறை வழங்கிய நீதிமன்றம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு தற்போது 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.


 
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 41 வயதான மதன் என்பவர் பொள்ளாச்சியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வேன் ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
இதனையடுத்து மதனின் குழந்தையை பார்க்க அவரது வீட்டின் அருகில் உள்ள 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி அடிக்கடி வந்து செல்வர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி அந்த சிறுமி மதனின் குழந்தையை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
 
அப்போது வீட்டில் யாரும் இல்லை, மதன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மதன் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து மதன் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
அதில் குற்றவாளியான மதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையை கட்ட தவறினால் கூடுதலாக மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.