வறண்ட சருமத்தை போக்கி மிருதுவான பாதங்களை பெற சில வழிகள்

Sasikala|
உடலில் நீர்ச்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்ப நிலையும்  காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சோப்கள் பயன்படுத்தி கழுவி கொண்டே இருப்பதாலும் இது  ஏற்படலாம்.

 
நம்மை அழகுபடுத்த பல விதமாக முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த அழகு படுத்தும் முயற்சியில் முகத்துக்கு மற்றும் தலை முடிக்கு கொடுக்கும் கவனத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. பாதங்களை பாதுகாப்பதில், அதை வறண்டு போகாமல் இருக்க  செய்வது நல்லது.
 
குளிக்கும் நேரத்தை குறைத்து, 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம். உங்கள் பாதங்களை அதற்கு மேல் நீரில்  ஊற வைக்க வேண்டாம். நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும்போது பாதத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் மறைந்து  தோல் வறண்டு விடும். சூடான நீரில் குளிக்கும் பழக்கும் வேண்டாம். வெது வெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக  கொள்வோம். சூடான நீர், சருமத்தில் உள்ள அதிகமான எண்ணெயை உரித்து எடுத்து விடும். மேலும் சருமம் கடினமாக மாறும்.
 
பாதங்களை கழுவியவுடன், காய வைத்து, சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இதனால் கால் பாதங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது. விரல்களுக்கு இடையில் இதை தடவ வேண்டாம். இவை பாக்டீரியாக்கள் நுழைய வழி வகுக்கும். பாதங்கள்  வறண்டு காணப்படும்போது அல்லது பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது வெடிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க,  குளிக்கும் போது படிக கல்லை கொண்டு பாதங்களை உரசலாம். இதனால் பாதங்களில் படிந்துள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். குளித்த பிறகு பாதங்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். 
 
மழை மற்றும் குளிர் காலங்களில் பாதங்கள் மேலும் வறண்டு காணப்படும். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி மாய்ஸ்சரைசர் தடவலாம். வறட்சியால் பாதத்தில் அரிப்பு ஏற்படலாம். இதை சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு, நோய் தொற்றுக்கு வழி வகுக்கும். எண்ணெய் அல்லது கிரீம்களை தடவி கொண்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும்.
 
தினமும் குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது  விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.
 
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால்  கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.
 
பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த  வெடிப்பு குணமாகும்.


இதில் மேலும் படிக்கவும் :