வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஜனவரி 2024 (08:51 IST)

அண்ணன் தங்கை மோதலால் அதகளமாகும் ஆந்திர அரசியல்! – வாகை சூடுவது யார்?

YS Jegan Mohan Reddy Vs Sharmila Reddy
ஆந்திராவில் ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி மேற்கொள்ள இருந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் தன் அண்ணன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பயப்படுவதாக சர்மிளா ரெட்டி விமர்சித்துள்ளார்.



ஆந்திராவில் 2019ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். இவர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஆவார். 2019ல் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க தீவிரமான பிரச்சாரம் மேற்கொண்டவரில் ஒருவர் அவரது தங்கை ஒய்.எஸ்.சர்மிளா ரெட்டி.

சமீபத்தில் தெலுங்கானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்த சர்மிளா ரெட்டி அங்கு முந்தைய முதல்வரான சந்திரசேகர் ராவ்க்கு எதிராக தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். ஆனால் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அதிலிருந்து விலகியுள்ள சர்மிளா ரெட்டி இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.


ஆந்திராவில் இந்த மே மாதத்தோடு ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி முடிவுக்கு வர உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றி அங்கு அடுத்து எந்த கட்சியின் ஆட்சி அமைய உள்ளது என்பதை முன்னறிவிப்பதாக இருக்கும். இந்நிலையில் சர்மிளா ரெட்டி காங்கிரஸ் கட்சிக்காக செய்யும் பிரச்சார முயற்சிகளுக்கு எல்லாம் முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம் அண்ணன் ஜெகன் மோகன் ரெட்டி.

சமீபத்தில் ஆந்திராவில் ஷர்மிளா ரெட்டி காங்கிரஸ் பேரணி ஒன்றை நடத்த இருந்த நிலையில் அதற்கு ஆந்திர அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து விமர்சனம் செய்த சர்மிளா ரெட்டி, தனது அண்ணன் ஜெகன் தன்னை பார்த்து அஞ்சுவதாக பேசியிருந்தார். அண்ணன், தங்கை இடையேயான இந்த அரசியல் மோதல் ஆந்திர அரசியலில் தொடர் பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

Edit by Prasanth.K