ஜம்மு காஷ்மீர் ஆளுனர் ஆகின்றாரா விஜயகுமார் ஐபிஎஸ்?

Last Modified சனி, 10 ஆகஸ்ட் 2019 (20:53 IST)
ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுப்பிடித்தவர் என்பதுதான். அதுமட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வரும் விஜயகுமார், ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும்

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட உள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தகுதி வாய்ந்த துணை நிலை ஆளுநர் ஒருவரை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த பட்டியலில் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பெயர் முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமைந்தாலும் மத்திய அரசின் நேரடிப் பார்வையில் மாநில அரசாங்கம் இருக்கும் என்பதால் அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த அதிகாரத்தை உடையவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போல் இல்லாமல், அதிகாரத்தை பயன்படுத்தும் நபராக இருக்க வேண்டும் என்பதற்காக விஜயகுமார் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை, எல்லைப் பாதுகாப்பு படை உள்ளிட்ட பல முக்கிய பணிகளில் ஆற்றிய விஜயகுமார், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆக நியமிக்கப்பட்டாலும் அந்த பதவியையும் பெருமைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :