ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூலை 2024 (11:10 IST)

எருமை யாருக்கு சொந்தம்? போட்டி போட்ட விவசாயிகள்! - போலீஸ் எடுத்த பலே முடிவு!

Buffalo

உத்தர பிரதேசத்தில் ஒரு எருமைக்காக இரு விவசாயிகள் வழக்கு தொடர்ந்த நிலையில் போலீஸ் சாதுர்யமாக செயல்பட்டு அந்த பிரச்சினையை முடித்து வைத்துள்ளார்கள்.

உத்தர பிரதேசம் மாநிலம் அஷ்கரன்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நந்தலால். விவசாயியான இவர் சொந்தமாக ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார். சமீபத்தில் நந்தலால் தன்னிடம் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பியிருந்த நிலையில் அதிலிருந்து அவரது எருமை மாடு ஒன்று காணாமல் போயுள்ளது.

3 நாட்களாக மாட்டை தேடியும் அது அவருக்கு கிடைக்கவில்லை. அப்போது பக்கத்தில் உள்ள புரேரி ஹரிகேஷ் என்ற கிராமத்தில் தனது எருமை மாட்டை நந்தலால் பார்த்துள்ளார். அதை தனது கிராமத்திற்கு ஓட்டி செல்ல அவர் முயன்றபோது, அவரை தடுத்த ஹனுமான் சரோஜ் என்பவர் அது தன்னுடைய எருமை மாடு என வாக்குவாதம் செய்துள்ளார்.
 

இதுகுறித்து நந்தலால் போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீசார் இருவரையும் வர செய்து விசாரித்தபோது இருவருமே அது தங்கள் மாடுதான் என விடாபிடியாக இருந்துள்ளனர். இதனால் குழப்பமடைந்த போலீஸார் உண்மையான மாட்டின் உரிமையாளரை கண்டுபிடிக்க திட்டம் ஒன்றை தீட்டினர்.

அதன்படி இருவரையும் அவரவர் கிராமம் செல்லும் பாதையில் நிறுத்தி எருமை மாட்டை அவிழ்த்து விட்டனர். உண்மையான எஜமானர் பின்னால் மாடு செல்லும் என அவர்கள் கணித்தனர். அதன்படி அவிழ்த்துவிடப்பட்ட மாடு நந்தலால் பின்னால் சென்றது. அதன்படி மாடு நந்தலாலுடையது என முடிவு செய்த போலீஸார் ஹனுமானை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Edit by Prasanth.K