ஜனநாயகத்தின் கருப்பு நாள் இன்று - ராகுல் காந்தி ஆவேசம்
பாஜக வை சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், ஆளுனர் முன்னிலையில் எடியூரப்பா தற்பொழுது பதவியேற்றார்.
பெரும்பான்மையில்லாத பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
நேற்றிரவு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்றனர்.மேலும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என்றனர். எடியூரப்பா ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை காலை 10:30 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை நாளை காலை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தனர்.
இதனையடுத்து கர்நாடகாவின் 23வது முதல்ராக எடியூரப்பா தற்பொழுது பதவியேற்றார். அவருக்கு கர்நாடக ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் ரிசார்டில் தங்கியிருக்கும் காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தள கட்சியினர் ஆளுனர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனார். இது ஜனநாயகப் படுகொலை என்றும் இது ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.