புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (07:24 IST)

எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் இன்று வேலைநிறுத்தம்: என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தொழிற்சங்க கூட்டமைப்பு இணைந்து இன்று நடத்தும் அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தம் காரணமாக வங்கி சேவை, போக்குவரத்து உள்பட பல முக்கிய சேவைகள் பாதிக்கப்படும் என தெரியவந்துள்ளது 
 
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க தொழில்துறை அமைச்சர் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று வேலைநிறுத்தம் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் திமுக உள்பட மற்ற மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகள் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்று ஏடிஎம் சேவை, காசோலை பரிவர்த்தனை, பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது ஆகிய வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும் தனியார் வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதால் தனியார் வங்கி சேவைகளில் எந்தவித பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் போக்குவரத்து துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அந்தத் துறையிலும் சில பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. போதுமான பேருந்துகள் இன்று இயக்கப்படுமா என்பது சந்தேகமே 
 
இந்தநிலையில் வேலைநிறுத்தங்கள் அல்லது போராட்டத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இன்றைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஊதியம் குறைப்பு உள்பட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இன்று எந்த ஊழியர்களுக்கும் விடுமுறையை அனுமதிக்க முடியாது என்றும் அரசு தரப்பில் இருந்து எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எச்சரிக்கையையும் மீறி இன்றைய வேலை நிறுத்தத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது