1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:05 IST)

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக 10 தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தோ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., முதலிய 10 தொழிற் நிறுவனங்கள் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. இதனால் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து தொழிற்சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”தொழிலாளர் மாநாடு நடைபெற்று நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அப்போது தொழிலாளர்கள் நலன்கள் குறித்த 12 அம்ச கோரிக்கைகளை பற்றி பேசுவதற்காக மத்திய குழு அமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் கடந்த சில ஆண்டுகளில் ரயில் நிலையங்கள், ரயில்கள், விமான நிலையங்கள், ஏர் இந்தியா சேவை என பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றை மத்திய அரசு தனியாருக்கு விற்று வருவதால் பல தொழிலாளர்கள் பணி இழந்துள்ளனர். விருப்ப ஓய்வு என்ற பெயரில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

எனவே மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இந்த வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.