ராமர் கோயில் கட்ட கற்கள் குவிப்பு; அயோத்தியில் பதற்றம்
ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தில் கற்கள் குவிக்கப்பட்டு வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாபர் மசூதி, ராமர் கோயில் பிரச்சனை இன்றுவரை முடிவுக்கு வராத நிலையில் உள்ளது. இதனால் அந்த இடம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பாஜக அரசு நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அயோத்தில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயில் கட்டும் பணிக்காக கற்களை குவித்து வருகிறது.
இதுகுறித்து விஸ்வ இந்து பரிஷித் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறியதாவது:-
ராம பக்தர்கள் பணத்திற்கு பதிலாக கற்கள் தருமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ராஜஸ்தானின் பரத்பூரில் இருந்து படிகப்பாறைக் கற்கள் வந்துள்ளன. உபியில் பாஜக அரசு ஆட்சியில் இருப்பதால் வெளிமாநிலத்தில் இருந்து கற்கள் எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.