புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (14:07 IST)

”அப்படியென்றால் தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்..” பிரதமரிடம் சீறும் ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு தமிழ் மேல் அவ்வளவு பற்றிருந்தால், தமிழை ஆட்சிமொழியாக்குங்கள் என பிரதமர் மோடிக்கு வலியுற்த்தும் வகையில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் ”உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழ் என்று தான் பேசியது அமெரிக்காவில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஐ.நா.அவையில் உரையாற்றும் போது கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதையும் தமிழிலேயே குறிப்பிட்டு உரையாற்றினார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழின் சிறப்புகளின் மேல் அக்கறையுள்ள நம் பிரதமர், விரைவில் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிப்பார் என நம்புவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திற்கும் இந்தி-சம்ஸ்கிரத மொழியிலேயே பெயர்கள் சூட்டப்படுகின்றன. அந்த திட்டத்தை குறித்து பிற மொழி பேசும் மக்கள் புரிந்துக்கொள்ளாத அளவிற்கு தான் அந்த பெயர்கள் உள்ளன எனவும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையின் முடிவில்,

”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி, தமிழர்கள் பிரதமர் மோடி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க விரைவில் நடைமுறையை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கிறார்கள் என தனது அறிக்கையை முடித்துள்ளார்.


பிரதமர் மோடி மற்ற நாடுகளுக்கு செல்லும்போது தமிழிலுள்ள பழமொழிகளை மேற்கோள்காட்டி பேசுவதும், ஆனால் இந்தியாவில் ஹிந்தி சம்ஸ்கிரதத்தை தூக்கிப்பிடிக்கிறார் எனவும் பலர் இணையத்தளங்களில் குற்றம் சாட்டிவருகின்றனர். மேலும் கடந்த மாதம் ஹிந்தி தினத்தன்று உள்துறை அமைச்சர் “ஹிந்தி தான் உலக அரங்கில், இந்தியாவை அடையாளப்படுத்தும் மொழி என கூறியபோது பிரதமர் மோடி மௌனம் காத்ததும் குறிப்பிடத்தக்கது.