மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்..! தலைவர்கள் இரங்கல்..!
சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார். அவருக்கு வயது 72.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சில நாட்களுக்கு முன்பு சுவாச தொற்று பிரச்னையால் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை மேலும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த சீதாராம் யெச்சூரி, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1952-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பள்ளி, கல்லூரி பருவகாலத்தில் பணியாற்றியவர். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் இயக்கத் தலைவராக மூன்றாண்டுகள் பணியாற்றினார்.
1984-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.