1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜனவரி 2018 (06:22 IST)

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ

பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அம்பலப்படுத்திய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ‘இடமாற்றத்திற்கு பயப்படாமல் பணியாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

பணியிட மாற்றத்தை பற்றி கவலைப்படாமல் இருந்தால் தான் அரசியல் சாசனப்படி அதிகாரிகள் பணியாற்ற முடியும். நான் ஆயுதப்படையில் பணியாற்றியபோது, காவலர்கள் பற்றி விசாரித்தேன். அதில் பெரும்பாலானவர்கள் எம்.பி., எம். எல்.ஏ.க்களுக்கு மெய்காவலர்களாக பணியாற்றுவது தெரியவந்தது. இது சட்டவிரோதமானது. அவர்களை வாபஸ் பெற முடிவு செய்தேன். இதற்கு எனது மேல் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தார். ஆயினும் நான் பயப்படாமல் அவ்வளவு பேரையும் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பும்படி உத்தரவிட்டேன்.

கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக பணியாற்றிய ஒருவர் அந்த பதவியை இழந்தார். ஆயினும் அவரிடம் இருந்த அரசின் கார்களை அவர் திரும்ப ஒப்படைக்கவில்லை. இது எனது கவனத்திற்கு வந்தது. அந்த வாகனங்களை திரும்ப பெற்றேன். அப்போதும் எனது நடவடிக்கைக்கு எதிர்ப்பு இருந்தது. சவாலை எதிர்கொண்டேன்.

எனக்கு முன்பு எனது இடத்தில் இருந்த அதிகாரிகள் இதுபற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை? என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிகாரிக்கு அரசியல் சாசனம் பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் யாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல் பணியாற்ற வேண்டும். அதிகாரிகள் பணியிட மாற்றத்திற்கு பயப்படாமல் பணியாற்ற வேண்டும். அப்போது தான் யாருக்கும் தலை வணங்காமல் பணியாற்ற முடியும்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான லைக்குகளையும் ஷேர்களையும் பெற்று வருவதால் கர்நாடகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரூபா ஐபிஎஸ் புகழ் பெற்றுள்ளார்.