மோடியின் 100 நாள் ஆட்சி – வித்யாசமாக வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி !
மோடி தலைமையிலான ஆட்சி 100 நாட்களை நிறைவு செய்திருக்கும் பாஜக ஆட்சிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக கடந்த மே மாதம் ஆட்சி அமைத்து 100 நாட்களைக் கடந்துள்ளது. இந்த 100 நாட்களில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையை சந்தித்து பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் மோடியின் முந்தைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பண மதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி போன்ற திட்டங்களேக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனது 100 நாட்கள் ஆட்சியைப் பற்றி ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற மோடி ‘100 நாட்களில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களும், வளர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. இந்த 100 நாளில் எடுக்கப்பட்ட முயற்சிகள் வருங்காலத்தில் பயனளிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மோடியின் இந்த 100 நாள் ஆட்சிப் பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘வளர்ச்சி எதுவுமே இல்லாத மோடியின் 100 நாட்கள் ஆட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தை அழிப்பதும், ஊடகத்தின் குரல்வளையை நெறிப்பதும்தான் நடந்து வருகிறது. நாட்டுக்கு சரியான தலைமை இல்லாமல் பொருளாதார சீர்குலைவை மீட்க எந்த திட்டமுமில்லை’ எனக் கூறியுள்ளார்.