திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (08:44 IST)

அக்னிபத் திட்டம் - இளைஞர்களின் கோபத்தீக்கு இரையான ரயில்வே!

மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. 

 
அக்னிபாத் திட்டம் அறிவிப்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது. நேற்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். 
 
ரயில்கள் மட்டுமின்றி பேருந்துகள், ஆட்டோக்களுக்கும் தீ வைக்கப்பட்டு வருகின்றன. பல அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டுள்ளன. தொடர்ந்து நடந்து வரும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு நாடு முழுவதும் நடைபெறும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் 12 ரயில்கள் தீக்கிரையாகியுள்ளன. 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ரயில்கள் வேறு பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. 90-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதி வழியிலேயே நின்று கொண்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அரசியல் தலைவர்கள் சிலரும் இந்த திட்டத்தை விமர்சித்துள்ள நிலையில் நேற்று மத்திய அரசு இந்த திட்டத்தின் கீழ் வயது வரம்பை 23 ஆக உயர்த்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றது. ஆனால் இளைஞர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.