ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (12:02 IST)

வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு திருச்சி சுருட்டு வழங்க பதவி! – மோடி சொன்ன நாடு மறந்த சம்பவம்!

வேளாண் சட்டங்கள் குறித்த விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி, வின்ஸ்டன் சர்ச்சில் திருச்சி சுருட்டுகள் பற்றி சொன்ன சம்பவம் வைரலாகியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேசமயம் அரசு வேளாண் சட்டங்களை முற்றிலும் விலக்காமல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி வின்ஸ்டன் சர்ச்சில் கதையை உதாரணமாக கூறியுள்ளார். அதில் “பிரிட்டிஷ் ஆதிக்க காலத்தில் பிரிட்டன் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு திருச்சி உறையூர் சுருட்டுகள் மீது பிரியம். அதனால் அவருக்கு தங்கு தடையின்றி உறையூர் சுருட்டுகள் கிடைக்க ஒரு பதவி உருவாக்கப்பட்டது. சிசிஏ எனப்படும் அந்த பதவிக்கு சர்ச்சில் சிகார் அஸிஸ்டெண்ட் என்று பெயர். பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து இந்தியா சுதந்திரம் பெற்றபிறகும் கூட இந்த பதவி தொடர்ந்து இருந்து வந்தது. 1947க்கு பிறகு அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தப்போது இந்த சிசிஏ பதவியில் இருந்தவரும் விண்ணப்பித்தார்.

அப்போதுதான் இப்படி ஒரு பதவி நெடுங்காலமாக தேவையின்றி இருந்ததே பலருக்கு தெரிய வந்துள்ளது. அதுபோல எந்த ஒரு துறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் அதன் அமைப்பு மெல்ல சிதைந்துவிடும்” என மேற்கோள் காட்டியுள்ளார்.