என்ன ஆனார் இந்திய விமானி ? – இரு நாடுகளும் மழுப்பலான பதில் !
எல்லைத் தாண்டித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த எதிர்தாக்குதலின் போது இந்தியாவைச் சேர்ந்த விமானி அபிநந்தன் என்பவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக இந்திய விமானி பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது சம்மந்தமாக விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ‘விமானிக் காணாமல் போனது உண்மைதான் என்றும் ஆனால் அவர் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளாரா என்பது குறித்து இன்னும் முழுமையான விவரம் தெரியவில்லை என்றுக் கூறியுள்ளார்.
அதையடுத்து சற்று முன்னர் ஊடகங்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ‘இந்திய விமானி பாகிஸ்தானிடம் உள்ளதாக தூதரகம் மூலமாக் அதிகாரப்பூர்வமானத் தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை’ எனக் கூறியுள்ளார். இதனால் காணாமல் போன விமானி என்ன ஆனார் என்பது சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ளது.
இதையடுத்து இந்திய விமானியைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒருவேளை அவர் பாகிஸ்தான் வசம் மாட்டியிருந்தால் அவரை விடுவிக்க இந்திய அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.