மன்மோகன்சிங் இன்று வேட்புமனு தாக்கல்: மீண்டும் ராஜ்யசபா எம்பி ஆகிறார்

Manmohan Singh
Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (08:32 IST)
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் அவரது பதவிக் காலம் முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அசாமில் இருந்து அவர் எம்பியாக தேர்வு செய்யப்படும் அளவுக்கு அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏக்கள் பலம் இல்லை. இதையடுத்து திமுக உதவியால் தமிழகத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் திமுக, ஏற்கனவே போட்ட ஒப்பந்தத்தின்படி வைகோவுக்கு ராஜ்யசபா எம்பி பதவியை அளித்துவிட்டது
இதனையடுத்து மன்மோகன்சிங்கை மீண்டும் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்ய முடிவு செய்த காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தானில் அவரை எம்பியாக்க முடிவு செய்தது. இதையடுத்து, இன்று, ஜெய்ப்பூர் வரும் மன்மோகன் சிங், வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
ராஜஸ்தானில் மன்மோகன்சிங் எம்பியாகும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் அவர் மீண்டும் ராஜ்யசபா எம்பி ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது
86 வயதான மன்மோகன்சிங் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக கடந்த 1982 முதல் 1985 வரை இருந்தவர் என்பதும், 1991 முதல் 2019 வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் என்பதும், 1991 முதல் 1996 வரை மத்திய நிதியமைச்சராக இருந்தவர் என்பதும், 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :