வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (15:53 IST)

நான் சபரி மலைக்குச் சென்றே தீர்வேன்: கேரளாவைச் சேர்ந்த பெண் சர்ச்சை பேச்சு

தனக்கு மீண்டும் அனுமதி கிடைத்தால் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்வேன் என்று கேரளாவைச் சேர்ந்த கனக துர்கா கூறியுள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குள் அனுமதிக்கப்படக்கூடாது  என்று கேரளா உயர் நீதிமன்றம் சட்டம் இயற்றியது. அதற்கு முன்பே பெண்களை, சபரி மலைக்குள் அனுமதிக்ககூடாது என்ற வழக்கம் இருந்து வந்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய வக்கீல் சங்கத்தைச் சேர்ந்த 6 பெண் வக்கீல்கள், சபரி மலையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தனர்.

இதனைத் தொடந்து சபரி மலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று பல பெண்ணிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட், அனைத்து வயது பெண்களும் சபரி மலைக்கு செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்க்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை தொடர்ந்து பல பெண்கள் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய தொடங்கினர்.

ஆனால் அதன் பின்பு, அவ்வாறு தரிசனம் செய்ய வரும் பெண்களை, ஆண் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். இதனிடையே சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புடன் நுழைந்த கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில், தனக்கு சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தது தொடர்பாக எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை எனவும், தனக்கு மீண்டும் அனுமதி கிடைத்தால் சபரிமலைச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய விருப்பமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர், பினராயி விஜயன் ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம், பெண்கள் மறுமலர்ச்சி தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், தன் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இயங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதிலிருந்து தென்னிந்திய அளவில் ஆண் ஐயப்ப பக்தர்கள், சபரிமலையின் புனிதத்தை இழிவுபடுத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

இந்நிலையில் கனகதுர்கா அளித்துள்ள பேட்டி, கேரளாவில் பெரும் சர்ச்சையையும், ஆண் ஐயப்ப பக்தர்களிடம் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.