ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (13:33 IST)

கல்லூரி விடுதி குளியலறையில் ரகசிய கேமரா.! வெளியான 300 வீடீயோக்கள்.! மாணவிகள் அதிர்ச்சி...!!

Bathroom
ஆந்திர பிரதேச மாநிலத்தில்  தனியார் கல்லூரியில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமிரா வைத்து வீடியோக்கள் எடுக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில்  தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மாணவிகள் விடுதியில் உள்ள குளியறையில் ரகசிய கேமிரா வைக்கப்பட்டு அதன் மூலம் மாணவிகளின் வீடியோ பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
விடுதி குளியலறையில் ரகசிய கேமிரா இருப்பதை மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு மாணவிகள் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதி வளாகத்தில் போராட்டத்தில் களமிறங்கினர். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு  தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில்  பல்வேறு அதிர்ச்சி தகவல்  வெளியாகியுள்ளன. 

College
மாணவர் கைது:

மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்த விஜய் குமார் எனும் பி.டெக் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த மாணவனின் லேப்டாப்பில் மாணவிகள் விடுதியில் இருந்து எடுக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த வீடியோக்களை அந்த மாணவன் சக மாணவர்கள் சிலருக்கு விற்றதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த மாணவனின் லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார், அந்த மாணவன் வேறு யாருக்கேனும் வீடியோக்களை விற்றுள்ளானா.? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 
வீடியோக்கள் வெளியான செய்தியறிந்த மாணவிகள் அதில் தங்கள் முகம் இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும், பல மாணவிகள் விடுதியை காலி செய்து வேறு இடத்திற்கு மாறி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.