ரயில்வே பிளாட்ஃபார்மில் ஆட்டோ ஓட்டிச் சென்ற டிரைவர்.. லட்ச ரூபாய் அன்பளிப்பு
மும்பையில் ரயில் நிலையத்தில், பிரசவமான பெண்ணை ஏற்றிக்கொண்டு நடைமேடையில் ஆட்டோ ஓட்டிய நபருக்கு ஒரு லட்ச ரூபாய் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை மேற்கு வழித்தடத்தில் உள்ள விரார் ரயில் நிலையத்தில் கர்ப்பிணி மனைவியுடன் ரயிலில் வந்திறங்கிய கணவர், தன் மனைவிக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி காரணமாக, அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் ப்ளாட்ஃபார்மில் இருந்து மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் செல்ல வேண்டுமென்று செய்வதறியாத திகைத்தார்.
அப்போது சாகர் கம்லாட் கவார் என்கிற ஆட்டோகாரரிடம் உதவி கேட்டார். உடனே ஆபத்துக்கு பாவமில்லை என நடைமேடை வரை ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தார். அந்த பெண்மணிக்கு குழந்தை பிறந்தது.
ஆனால் சாகர், விதிகளை மீறி ஆட்டோ ஓட்டியதால் கைது செய்யப்பட்டார். பின்னர் பலரின் ஆதரவிற்கு பிறகு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் இவரது செயலை பாராட்டி சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரே 1 லட்சம் ரூபாய் அன்பளிப்பு அளித்துள்ளார்.