வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (11:58 IST)

இந்தியா முழுவதும் நாளை வங்கிகள் வேலை நிறுத்தம்

பாரத ஸ்டேட் வங்கியுடன் மற்ற வங்கிகளை இணைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு தெரிவித்து, நாடுமுழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் நாளை(29.07.2016) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 


 

 
பாரத ஸ்டேட் வங்கியின், ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், மைசூர், பாட்டியாலா ஐதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கும் முடிவை சமீபத்தில் மத்திய அரசு எடுத்தது. 
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதம் 12, 13 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. ஆனால், இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. எனவே அந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
 
அதன்பின், அந்த போரட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். 80 ஆயிரம் வங்கி கிளைகள் மூடப்படுகின்றன. 
 
தமிழகத்தில் மட்டும் 8500 வங்கிகளில் பணிபுரியும் 70 ஆயிரம் ஊழியர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள், எனவே நாளை வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, காசோலை பரிவர்த்தனை, பணப்பட்டுவாடா, உள்ளிட்ட பல்வேறு பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் கோடிக்கு வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த வேலை நிறுத்தத்தால், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அனைத்து ஏடிம் மையங்களிலும் இன்று பணம் நிரப்பப்படுகிறது.