சாப்பாட்டுத் தட்டிற்காக அநியாயமாக கொல்லப்பட்ட இளைஞர்
உத்திரபிரதேசத்தில் விருந்தில் பிளேட் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட தகராறின் போது வாலிபர் ஒருவர், அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் விக்ராம்பூர் பகுதியில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றது. விழாவில் உறவினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. அப்போது பிளேட் தட்டுப்பாட்டால் சிலருக்கு பிளேட் வழங்க தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு கோஷ்டி வாய்த் தகராறில் ஈடுபட்டது.
ஒருகட்டத்தில் சண்டை முற்றிப்போகவே, வாய்ச் சண்டை கைக்கலப்பாக மாறியது. இந்த சண்டையில் விஷால் எனும் இளைஞர் பலியானார். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளேட்டிற்காக இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.