டிராக்டர் பேரணியை குலைக்க திட்டம்: அவதூறு பரப்ப காத்திருக்கும் பாக்.!
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் வகையில் பாக். அவதூறு பரப்ப திட்டம் என தகவல்.
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா உள்பட வட மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் நாளை குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நேரத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த டிராக்டர் பேரணியில் நாளை 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராக்டரில் அணிவகுக்க விவசாயிகள் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து டிராக்டர்கள் தலைநகரை நோக்கி படை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனிடையே டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை சீர்குலைக்கும் வகையில் வதந்திகள் பரப்ப பாகிஸ்தானில் சுமார் 300 ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.