25 ஆண்டுகளுக்கு இலவச விஐபி தரிசனம்.. யார் யாருக்கு தெரியுமா? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!
25 ஆண்டுகளுக்கு இலவச விஐபி தரிசனம் வழங்கப்படும் என்று ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் பொற்கோவில் போலவே திருமலை ஏழுமலையான் குடியிருக்கும் கர்ப்பகிரகம் மற்றும் விமான கோபுரத்தில் தங்கத்தில் சுவர் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக கிலோ கணக்கில் தங்கம் தேவை இருப்பதால் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெற முடிவு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து ஆந்திராவில் உள்ள பக்தர்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள், வெளிநாட்டு பக்தர்கள் கிலோ கணக்கில் தங்கத்தை காணிக்கையாக வழங்கினர். ஆனால் இந்த திட்டம் ஒரு சில காரணங்களால் தடைப்பட்ட நிலையில் தற்போது இந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து நன்கொடையாக பெறப்பட்ட தங்கத்தை பக்தர்களுக்கு திருப்பி தர முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஒரு சில பக்தர்கள் ஏழுமலையான் கொடுத்த தங்கத்தை வாங்க மறுத்து விட்டனர். இதனை அடுத்து தங்கத்தை வாங்க மறுத்த பக்தர்களுக்கு ஒரு ஆண்டில் மூன்று முறை விஐபி தரிசனம் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை மூன்று நாட்கள் தங்குவதற்கு அறைகள் வழங்கப்படும், 20 லட்டுகள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும் என்றும் மேலும் 5 கிராம் தங்க காசு, 50 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகள் தங்கத்தை நன்கொடையாக வழங்கிய பக்தர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் 25 ஆண்டுகள் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran