திருப்பதியில் புஷ்பா பாடலுக்கு நடனமாடிய இளம்பெண்: நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்..!
திருப்பதி மலை அடியில், ஒரு இளம் பெண் "புஷ்பா" பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆலய பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரி என்ற சோதனை சாவடி அருகே இளம்பெண் ஒருவர் காரில் வந்தார். காரை நிறுத்தியவுடன், "புஷ்பா" பாடலுக்கு நடனம் ஆடியதோடு, அதை தனது செல்போனில் பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், அது பக்தர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தது. பலர், இந்த செயல் ஆலயத்தின் மரியாதைக்கு மாறானது என்று கண்டனம் தெரிவித்ததுடன், திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், காவல்துறை அந்த இளம் பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் , ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட அந்த இளம் பெண், சமீபத்தில் ஒரு மன்னிப்பு வீடியோ பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், திருமலை திருப்பதி பக்தர்களிடம் மன்னிப்பு கோரியதுடன், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால், இந்த சம்பவம், சமூகத்தில் ஆலய மரியாதையை பாதுகாக்க வேண்டும் என்ற புதிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
Edited by Mahendran