டிராக்டர் விபத்தில் 22 பேர் பலி..! முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணம் அறிவிப்பு..!
உத்திர பிரதேசத்தில் டிராக்டர் ஒன்று குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் மகா பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க டிராக்டர் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 22 பேர் பலியான நிலையில், தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் பலரும் உயிர் இழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள் என்றும் காயமடைந்த அனைவருக்கும் முறையான இலவச சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பகவான் ஸ்ரீராமரை வேண்டிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2-லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 -மும் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.