1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Updated : வியாழன், 29 நவம்பர் 2018 (18:25 IST)

'2.0' திரைவிமர்சனம் ஷங்கரின் பிரமாண்ட விருந்து

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா போன்ற பிரபலங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த படம் என்றால் பிரமாண்டத்திற்கு பஞ்சமே இல்லாத படமாக  இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் 2.0 உள்ளது. வெறுமே கிராபிக்ஸ் காட்சிகளை மட்டுமே இன்றி இன்றைய உலகிற்கு தேவையான கருத்தை மனதில் பதியும் வகையில் இந்த படத்தை ஷங்கர் கொடுத்துள்ளார்.

செல்போன்களை மனிதர்கள் பயன்படுத்த தொடங்கிய பின்னர் அதிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் போட்டிகளால் அளவுக்கு அதிகமான ரேடியேஷன்களால் பறவை இனமே அழியும் ஆபத்து உள்ளது. இந்த உண்மையை புரிந்து கொண்ட அக்சய்குமார் செல்போன்கள் பயன்படுத்துவதை குறைக்க போராடுகிறார். இதற்காக அரசாங்கத்திடமும், மக்களிடமும் நீதிமன்றத்திலும் கோரிக்கை வைக்கின்றார். ஆனால் அவருக்கு மிஞ்சுவது அவமானம் மட்டுமே. இதனால் ஒருகட்டத்தில் மனமுடைந்து செல்போன் டவரிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் பறவைகளின் ஆன்மாக்களுடன் தன்னுடைய ஆன்மாவை இணைத்து ஐந்தாம் சக்தியை உருவாக்கி அந்த சக்தியின் உதவியால் செல்போன்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களை காப்பற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போர் தான் இந்த படத்தின் கதை

இதுவரை வெளிப்படுத்தாத நடிப்பை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெடல் ரஜினியின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. வசீகரன் கேரக்டர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், சிட்டி மற்றும் ரோபோ வெர்ஷன் 2.0 கேரக்டர்களில் ரஜினி தனது நடிப்பை வெளுத்து வாங்கிவிட்டார். இறுதியில் சஸ்பென்ஸ் ஆக வரும் 3.0 ரஜினி, ரசிகர்களுக்கு கிடைத்த கூடுதல் போனஸ்

நாயகியை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தாமல் கதைக்கும் சேர்த்தும் பயன்படுத்தும் இயக்குனர் ஷங்கர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வசீகரனுக்கும், சிட்டிக்கும், 2.0 ரோபோவுக்கும் உதவி செய்யும் ரோபோ கேரக்டரில் எமிஜாக்சன் நடித்துள்ளார். ரோபோவுக்கும் காதல் வரும் என்ற உணர்வை அவர் வெளிப்படுத்திய விதம் சூப்பர்.

அக்சயகுமார் நடிப்பில் மிரட்டுகிறார். இடைவேளைக்கு பின்னர்தான் அக்சய் அறிமுகமாகிறார் என்றாலும், இரண்டாம் பாதியில் அவருடைய கேரக்டர் எடுத்துக்கொள்ளும் பங்கு மிக அதிகம். வயதான பறவைகளின் விஞ்ஞானி கேரக்டரில் நமது நெஞ்சை தொடும் அக்சய், அதன் பின் ராஜாளியாக மாறி செய்யும் அட்டகாசங்கள் சூப்பர்.

எந்திரன்' பட வில்லன் டேனியின் மகன் கேரக்டரில் நடித்திருக்கும் சுதன்ஷூ பாண்டேவுக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியின் திருப்புமுனைக்கு காரணமான கேரக்டர் என்பதால் ரசிக்க முடிகிறது. அதேபோல் உள்துறை அமைச்சர் கேரக்டரில் நடித்திருக்கும் அதில்ஹுசைன் நடிப்பும் ஓகே

ஏ.ஆர்.ரஹ்மானின் உலகத்தர பின்னணி இசை இந்த படத்தை தூக்கி நிறுத்துகிறது. அக்சயகுமாருக்கும், 2.0 ரோபோ ரஜினிக்கும் அவர் கம்போஸ் செய்துள்ள தீம் மியூசிக் இன்னும் காதுக்குள்ளே இருக்கின்றது. இரண்டு பாடல்களும் படத்தின் காட்சிகளோடு வருவதால் பாடல்களால் படத்தின் விறுவிறுப்பு குறையவில்லை. நல்லவேளையாக 'இந்திரலோகத்து சுந்தரி' பாடலை படத்தின் இறுதியில் வைத்துள்ளனர்.

நீரவ்ஷாவின் கேமிராவும், அந்தோணியின் படத்தொகுப்பும் பாராட்டும் வகையில் உள்ளது. இருவருமே தங்களுடைய அதிகபட்ச உழைப்பை கொடுத்துள்ளனர்.

ஷங்கரால் இப்படி கூட கற்பனை செய்ய முடியுமா? என்ற அளவுக்கு உள்ளது ஒவ்வொரு காட்சியும். திடீர் திடீரென செல்போன்கள் பறப்பது, செல்போன்கள் சாலையில் ஊர்ந்து வருவது, ராணுவத்தால் கூட முறியடிக்க முடியாத செல்போனின் அட்டகாசங்கள், கிளைமாக்ஸில் கால்பந்தாட்ட மைதானத்தில் ரஜினி-அக்சய் மோதும் காட்சிகள் ஷங்கரின் உச்சகட்ட கற்பனை. மேலும் கற்பனையை விஷூவலாக காட்ட அவர் எடுத்திருக்கும் முயற்சிகள் அபரீதமானவை. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டு ரசிகர்களுக்கு அனைத்து காட்சிகளையும் பெஸ்ட் ஆக கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.

இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல. பறவைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உரியது குறிப்பாக மனித இனம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் பறவைகள் நிச்சயம் வாழ வேண்டும் என்ற உண்மையை மிக ஆழமாக கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜெயமோகனின் வசனம் அமைந்துள்ளது சிறப்பு

மொத்தத்தில் வெறும் டெக்னாலஜி, கிராபிக்ஸ் காட்சிகளை மட்டும் நம்பாமல் ரஜினியை சரியான வகையில் உபயோகித்தது, அழுத்தமான கருத்துடன் கூடிய திரைக்கதை அமைத்தது, பிரமாண்டமான 3டி காட்சிகள் என ஷங்கரின் பிரமாண்டமான விஷூவல் விருந்துக்காக அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் '2.0

ரேட்டிங்: 4/5