வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : திங்கள், 25 மார்ச் 2019 (14:19 IST)

தேர்தலுக்காக 26 லட்சம் மை டப்பாக்கள் – 33 கோடி ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலுக்காக 26 லட்சம் மைடப்பாக்கள் வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தேர்தல் நாளன்றுப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களை சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அதையடுத்து தேர்தல் நாளன்று வாக்களித்ததன் அடையாளமாக வாக்காளர்களின் இடதுகை ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் மைடப்பாக்களை வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் நடக்க இருக்கும் தேர்தலுக்காக 33 கோடி ரூபாய் செலவில் 26 லட்சம் மை பாட்டில்களைத் தேர்தல் ஆணையம் ஆர்டர் செய்துள்ளது. ஒவ்வொரு மை பாட்டிலும் 10 ml மையினைக் கொண்டிருக்கும்.  சராசரியாக ஒரு மை பாட்டிலின் விலை 127 ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. இது கடந்த பாராளுமன்றத் தேர்தலை விட 4.5 லட்சம் அதிகம் எனக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் அதிகரித்திருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையே ஆகும் எனத் தெரிகிறது. இந்த மை பாட்டில்கள் கர்நாடக மாநில அரசு நிறுவனமான மைசூர் பெயிண்ட் அன்ட் வார்னிஷ் லிமிடெட் நிறுவனத்திடம் வாங்கப்படுகின்றன.