1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By

ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள்...

நாகரீகம் என்ற பெயரில் பெண்களில் பலரும் எடுப்பான அழகுடன் விளங்குவதற்காக அதிக உயரம் கொண்ட குதிகால் பாதணிகளை அணிகின்றனர். பெண்கள், ஆடைகளுக்கு ஏற்ற பாதணிகள் அணிந்து நடக்கும்போது அந்தப் பாதணிகள் அவர்களின் அழகை மேலும் மெருகூட்டுவதுடன் அவர்களிடம் ஒருவித செல்வந்த  தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
நாகரீக உலகில் புதிது புதிதாக பலவடிவங்களில் பாதணிகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள். இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர். 
 
உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும். ஆனால் இதையே தொடர்ந்து பயன்படுத்துவதால் பல்வேறு உடல் பிரச்சனைகளை சந்திக்க  வேண்டியிருக்கும்.
 
இவற்றைத்தவிர, இந்த பாதணிகளால் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள் பணத்தை  கொடுத்து பொருட்களை மட்டும் வாங்கவில்லை. பொருளுடன் சேர்த்து உடல் நலக்கேடுகளையும் வாங்கிக்கொண்டு வருகின்றார்கள். இத்தகைய அதிக உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
 
இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன. நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது. அதிக உயரமாக பாதணிகள் கொஞ்சம் சறுக்கினாலும் கீழே  விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம்  பிசகினாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். 
 
உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்துவிடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக்  கூட ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளது.