வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தலைமுடி உதிர்வை தடுக்கும் மருதாணி

மருதாணி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது.
இலையுடன், படிகாரமும் சேர்த்து அரைத்து அதன் விழுதை, கருந்தேமல், படைகள், கால்வலி, நரம்பு இழுப்பு உள்ளவர்கள் தேய்த்து வர இந்நோய்கள் நீங்கும். இலையை உள்ளங்காலில் தேய்த்தால் கண் எரிச்சல் நீங்கும். இலையின் விழுதை தலையின் இருபுறமும் பக்கவாட்டில், நெற்றிப் பொட்டின் பற்றுப்போட  தலைவலி குணமாகும்.
 
அம்மை போட்ட காலத்தில் கண்களுக்கு அம்மையால் யாதொரு தீங்கும் நேரிடாதவாறு பாதுகாக்க இலையை அரைத்து இருகாலடிகளில் வைத்துக் கட்டலாம்.  நகங்களுக்கு வைக்க நகம் யாதொரு நோய்க்கும் உட்படாமல் தடுக்கப்படும்.
 
மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும். இலைகள் தோல் வியாதிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகின்றன. இலைச்சாறு மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல்  வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
 
இலைகளின் இளஞ்சிவப்பு நிறச்சாயம் உள்ளங்கைகள், நகங்கள், பாதங்கள் மற்றும் கேசத்திற்கு நிறங்கொடுக்கும் பொருளாகவும், துணிச்சாயமாகவும்  உபயோகிக்கப்படுகிறது. நறுமணப் பொருட்கள் சேர்க்கையிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
விரல்களுக்கு மருதாணி இட்டு வருவதால் நகக்கண்ணிலுள்ள இடுக்குகளில் படிந்துள்ள அழுக்கோடு கூடிய நுண்ணுயிர் கிருமிகள் அழிய அதிக வாய்ப்புண்டு. நகச்சுற்று தடுக்கப்படுகிறது. சுத்தமான தேங்காய் எண்ணெயில் உலர்ந்த இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் மயிர் உதிர்வது  தடுக்கப்படும். நரை, பூனைமயிர் உள்ளவர்கள் தேய்த்து வந்தால் கேசம் கறுப்பாகும்.
 
கூந்தலின் செழுமையான கேச வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. மருதாணிப் பூவை அரைத்து தொழுநோய் புண்களுக்குப் பற்றிடலாம். கேசத் தைலத் தயாரிப்பிற்கும், வாசனைத் தைலங்கள் தயாரிப்பிற்கும் மருதாணி எண்ணெய் உபயோகமாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதன் சாறு, வெயில் காலங்களில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். கேசத்திற்கு குளிர்ச்சியையும், கேசப் பராமரிப்பில் கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது.