வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (12:10 IST)

வைகை ஆற்றில் கள்ளழகர்...! பரவசம் அடைந்த பெண் காவலர்கள்.! விண்ணைப் பிளந்த கோவிந்தா முழக்கம்..!!

Madurai Kallazagar
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.  கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியபோது லட்சக்கணக்கான பக்தர்கள்  கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். அப்போது   பெண் காவலர்கள் தலையில் நீரினை தெளித்து பக்தி பரவசமடைந்தனர்.
 
மதுரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த 19-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில் முக்கிய விழாவான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.
 
இதையொட்டி கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக்கம்புடன் கள்ளழகர் திருக்கோலத்தில், தங்க பல்லக்கில் அழகர்கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர், வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
 
தொடர்ந்து, மதுரை மூன்றுமாவடி, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், நேற்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமும் நடைபெற்றது.
 
இதனையடுத்து, இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக் கொண்டு, தங்க குதிரை வாகனத்தில்  தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி எதிரில் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் கள்ளழகர் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள்  "கோவிந்தா" கோஷம் விண்ணை முட்ட, வைகை கரை வந்தடைந்தார் .
 
அங்கு கள்ளழகரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க, தங்கக்குதிரையில் பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. 
 
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள்  தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை திரண்டு நின்றனர். பின்னா் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியபோது லட்சக்கணக்கான பக்தர்கள்  கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளிய  பகுதியில் இருந்த நீரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏராளமான பெண் காவலர்கள் தங்களது தலையில் தெளித்து தரிசனம் செய்தனர். 

Actor Soori
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண நடிகர் சூரி மற்றும் பாடகர் வேல்முருகன் ஆகியோர் வருகை தந்தனர். முன்னதாக வீர ராகவ பெருமாள் மண்டகப்படி பகுதிக்கு வந்த நடிகர் சூரியுடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மண்டகப்படியில் கள்ளழகருக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மாலைகளை நடிகர் சூரி தொட்டு வணங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், அருள்முருகன், புகழேந்தி , ஆதிகேசவலு ஆகியோர் கள்ளழகரை சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சியினர் சிறப்பாக செய்து இருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததுடன் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.