வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (13:20 IST)

பைரவருக்கு விருப்பமான அஷ்டமி வழிபாடு !!

Bhairavar
பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.


ஐந்து தனித்தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய். மற்றொன்றில் விளக்கு எண்ணெய். அடுத்ததில் பசு நெய். அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்.

ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது, (ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடாது சக்தி மோதல் உண்டாகும்) இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீராத பிரச்சனையும் தீரும். காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும்.  பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவாலயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப்போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர்.

எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவுடனும், இரவு கோயில் மூடப்படும்போதும் பைரவ பூஜை செய்வார்கள்.  சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே. நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். கால பைரவர், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர்.

சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல திருப்பெயர்கள் பைரவருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.